ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பெண்களுக்கு எதிரான சட்டங்களை அறிவித்து வருகிறது. பெண்கள் படிக்கக்கூடாது, கட்டாயம் புர்கா அணிய வேண்டும், பூங்காவிற்கு செல்லக் கூடாது, ஆண் துணையில்லாமல் வெளியே செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட பெண்களுக்கு பல்வேறு பழமைவாத கட்டுப்பாடுகளை தாலிபான் தலைமையிலான அரசு விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தாலிபான் தலைமையில் நடந்து வரும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்களுக்கு உரிமைகள் பறிக்கப்பட்டால், ஆப்கானிஸ்தான் அரசுக்கு வழங்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும், உலகிலேயே அதிகளவில் பெண்கள் ஒடுக்கப்படும் நாடாக ஆப்கானிஸ்தான் விளங்குவதாக ஐ.நா சிறப்பு பிரதிநிதி ரோஸா ஒடுன்பெயேவா தெரிவித்திருக்கிறார்.