Skip to main content

தீவிரமடையும் போர்; பதவியை ராஜினாமா செய்த ஐ.நா மனித உரிமை இயக்குநர்

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

UN Human Rights Director resigns over Israel issue

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 3 வாரத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

இதையடுத்து காசா மீது தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் அதனைத் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. பாலஸ்தீன தொலைத் தொடர்பு நிறுவனத்தின் செல்போன் கோபுரங்களும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், காசாவில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இணையச் சேவை இல்லாததால் தற்போது என்ன நடக்கிறது என்பது தெரியாமல் உலகத்திலிருந்து காசா தனிமைப்படுத்தப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதுவரை 8,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும், அதில் 60 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

 

காசாவிற்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் இனி வரும் காலங்களில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் எனக் கூறப்படுகிறது. நேற்று பாலஸ்தீனத்தில் உள்ள ஜபாலியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஜபாலியாவில் உள்ள அனைத்து கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஜபாலியாவிற்கு தஞ்சமடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் இயக்குநர் கிரேக் மொகிபேர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையருக்கு அவர் எழுதிய கடிதத்தில் காசா விவகாரத்தில் ஐ.நா சபை மற்றும் மேற்கத்திய நாடுகள் அணுகுமுறை அதிருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்