
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்குத் திறந்து இரவு 10 மணிக்கு மூடப்பட்டு வருகிறது. அதே போல டாஸ்மாக் அருகில் உள்ள பார்களுக்கும் திறந்து மூட அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்த பார்கள் எந்த விதிமுறைகளையும் கடைப்பிடிப்பதும் இல்லை டாஸ்மாக், மதுவிலக்கு அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. அதற்கு ஈடாக மாதாந்திர கட்டணமும் தேதி மாறாமல் மாமூலாக வசூலித்துக் கொள்கின்றனர். மற்றொரு பக்கம் கிளப் என்ற பெயரில் ஏராளமான தனியார் மதுக்கள் நகரங்களை ஆக்கிரமித்து வருகிறது.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் தூத்தூர் ஊராட்சி கேசராப்பட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை ஒட்டியுள்ள பாருக்கு நள்ளிரவில் செல்லும் ஒரு குடிமகன் கம்பி தடுப்புகளுக்கிடையே உள்ள கவுண்டர் பக்கம் நின்று கொண்டு அண்ணே அண்ணே என்று அழைக்க உள்ளிருந்து வரும் பார் ஊழியரிடம் ஒரு பீர் குடுங்கண்ணே என்று சொல்ல பிரிட்ஜில் இருந்து பீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்துவிட்டு ரூ.250 பணத்தை வாங்கிய ஊழியரிடம் அண்ணே புதுசா இருக்கே எந்த ஊர்ணே என்று குடிமகன் கேட்க பெருமாநாடு என்று சொல்கிறார் ஊழியர்.
அடுத்து, எத்தனை மணி வரைக்கும் கடை இருக்கும் என்று மதுப்பிரியர் கேட்க விடிய விடிய இருக்கும். எப்ப வேணும்ன்னாலும் வந்து வாங்கிக்கலாம் என்று பார் ஊழியர் சொல்கிறார். இந்த உரையாடல்களை மதுப்பிரியர் தனது செல்போனில் பதிவு செய்த வீடியோ தான் இன்று வைரலாக பரவி வருகிறது. டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்கள், மதுவிலக்கு போலிசாருக்கோ தெரியாமல் இந்த 24 மணி நேர பார் மது விற்பனைகள் நடப்பதில்லை. இப்படித்தான் ஒவ்வொரு ஊரிலும் பார்களில் 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு மது விற்பனை நடக்கிறது.
இப்போது வீடியோ வெளியானதால் சம்மந்தப்பட்ட பாருக்கு மட்டும் செல்லும் அதிகாரிகள் சில நாட்களுக்கு மட்டும் இரவு வியாபாரத்தை நிறுத்தச் சொல்லிட்டு வருவாங்க அவ்வளவு தான். ஆனால் புதுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களுக்குள்ளேயே 24 மணி நேர பார் மதுவிற்பனை நடப்பது அதிகாரிகளுக்குத் தெரியாமலா நடக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.