
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கச்சத்தீவை திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையில் நாளை (02.04.2025) தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்த தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார். அப்போது, “இலங்கை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மீனவர் பிரச்சனை குறித்தும் அந்நாட்டு அரசுடன் பேச வேண்டும். இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட கச்சத்தீவை மீட்பதே நிர்ந்தர தீர்வாக அமையும்.
அதோடு தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வர வேண்டும்” எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தமிழக அரசு சார்பில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் கடந்த 27ஆம் தேதி (27.03.2025) தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.