உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா, உக்ரைன் மீது படையெடுத்தால், ரஷ்யா கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என எச்சரித்து வருகிறது. மேலும் அமெரிக்கா, உக்ரைனுக்கு அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை அனுப்பியுள்ளது. மேலும் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பாவிற்கு சிறிய அளவிலான படைகளையும் அனுப்பவுள்ளது.
இந்தநிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த விவகாரம் தொடர்பாக ஜோ பைடனை விமர்சித்துள்ளார். டெக்ஸாஸ் மாகாணத்தில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய ட்ரம்ப், "ஜோ பைடனின் திறமையின்மையும், பலவீனமும் மூன்றாம் உலகப்போர் ஏற்படுவதற்கான ஆபத்தை உருவாக்குகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ட்ரம்ப், "கிழக்கு ஐரோப்பாவின் எல்லையைப் பாதுகாக்க படைகளை அனுப்பும் முன், அவர் டெக்சாஸில் உள்ள நமது எல்லையைப் பாதுகாக்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.