
நித்தியானந்தா கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதாவது நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் என்பவர் வீடியோ மூலமாக ஆன்மீக சொற்பொழிவில் இந்த தகவலைத் தெரிவித்ததாக கூறப்பட்டது. அதே சமயம் நித்தியானந்தாவிற்குச் சொந்தமான சுமார் 4 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க இந்த முயற்சி நடைபெறுகிறதா? எனவும், அவர் மீதான வழகுகளிலிருந்து தப்பிக்க இவ்வாறு தகவல் பரப்பப்படுகிறதா எனவும் குழப்பம் எழுந்திருந்தது.
இந்நிலையில் நித்தியானந்தா தொடர்பாகப் பரவிய செய்திகளுக்கு கைலாசா முகநூல் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “நித்தியானந்தா இறந்து விட்டதாகப் பல ஊடகங்கள் வேண்டுமென்றே தீங்கிழைக்கும் விதமாக கூறி வருகின்றன. ஆனால் நித்தியானந்தா ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், சுறுசுறுப்பாகவும், உயிரோடும் உள்ளார். நித்தியானந்தாவை இழிவுபடுத்தவும், அவதூறு பரப்பவும் மேற்கொள்ளப்படும் இந்த தீங்கிழைக்கும் அவதூறு பிரச்சாரத்தை கைலாசா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது.
இந்த தீங்கிழைக்கும், அவதூறான செய்தி வெளியீடுகள் சட்டத்தின் பல விதிகளை வேண்டுமென்றே மீறியுள்ளன. மேலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளையும் காயப்படுத்தியுள்ளன. நித்தியானந்தா மீது 70க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகள் இந்து விரோத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. அதாவது நேரடி வழிகளில் தோல்வியடைந்த அவர்கள், இப்போது இது போன்ற தவறான தகவல்களை பரப்புகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.