
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் நேற்று முன்தினம் (28.03.2025) இந்திய நேரப்படி காலை 11:55 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதே சமயம் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டைவிட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். அதன் பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இவ்வாறாக நேற்று மட்டும் 7 முறை மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில் ஏற்பட்ட இந்த பேரிடர் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடங்களில் உள்ள இடிபாடுகளில் சிக்கியவர்களில் முதற்கட்டமாக சுமார் 100 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியது. இத்தகைய சூழலில் மூன்றாவது நாளாக இன்றும் (31.03.2025) மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய நிலவரப்படி மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1644-ஐ தாண்டி 2000 நெருங்கி வருகிறது. அதேநேரம் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்க பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
நேற்று மாலையும் 04.30 மணியளவில் மியான்மரில் மீண்டும் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் காரணமாக மக்கள் மீண்டும் பீதியடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது.