இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ இல்லங்களில் ஒன்று விண்ட்சர் கோட்டை. இந்த கோட்டையில் உள்ள மைதானத்தில் வைத்து இந்திய வம்சாவளியை சேர்ந்த 19 வயது சீக்கியரை பிரிட்டன் காவல்துறை கைது செய்தது. அவரிடமிருந்து குறுக்கு வில் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. முதலில் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததற்காகவும், அபாயகரமான ஆயுதத்தை கையில் வைத்திருந்ததற்காகவும் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த சீக்கிய இளைஞர் மீது மனநல சட்டத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் பிரிட்டனின் தி சன் ஊடகம், கைது செய்யப்பட்டுள்ள நபர், கைது செய்யப்படுவதற்கு முன்பு தனது ஸ்னாப்ஷாட் கணக்கில் இருந்து தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் முகத்தை மறைந்துள்ள நபர் கையில் ஆயுத்தோடு, "நான் செய்தவற்றுக்காகவும், நான் என்ன செய்யப்போவதற்காகவும் என்னை மன்னிக்கவும். நான் அரச குடும்பத்தின் ராணி எலிசபெத்தை கொல்ல நினைக்கிறேன். இது 1919 ஆம் ஆண்டு ஜாலியன்வாலாபாக் படுகொலையில் இறந்தவர்களுக்கான பழிவாங்கல். மேலும் இனத்தின் காரணமாக கொல்லப்பட்ட, அவமானப்படுத்தப்பட்ட மற்றும் பாகுபாடு காட்டப்பட்டவர்களின் சார்பில் நடைபெறும் பழிவாங்கும் நடவடிக்கையாகும். நான் ஒரு இந்திய சீக்கியன். என் பெயர் ஜஸ்வந்த் சிங் சைல். என் பெயர் டார்த் ஜோன்ஸ்" என்கிறார்.
தற்போது இங்கிலாந்து காவல்துறை, இந்த வீடியோ குறித்து விசாரித்து வருகிறது.