தாய்லாந்தில் ஷாப்பிங் மால் ஒன்றில் புகுந்த ராணுவ வீரர் ஒருவர், அவரது துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டதில் அங்கிருந்த அப்பாவி மக்கள் 29 பேர் பலியானார்கள். அந்த ராணுவ வீரரை 18 மணிநேர போராட்டத்துக்குப்பின் போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள கோரத் நகரில் டெர்மினல் 21 என்ற ஷாப்பிங் மால் உள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த மாலின் உள்ளே துப்பாக்கியுடன் நுழைந்த ஜக்ராபந்த் தோமா என்ற ராணுவ வீரர் ஒருவர், அங்கிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 29 பேர் கொல்லப்பட்டனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த போலீஸார் விரைந்து செயல்பட்டு ஷாப்பிங் மாலில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். பின்னர் சுமார் 18 மணிநேரம் போராட்டத்திற்கு பின் அந்த ராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 29 பேர் கொல்லப்பட்டதாகவும், 42க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 10 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.