
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மழையூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர் மகன் முருகேசன் (20). மரம் வெட்டும் தொழிலாளி. இவர் கடந்த மாதம் இரவு வேலை முடிந்து அதே ஊரில் தனது வீட்டில் இருந்து 200 மீ தூரத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்ற போது அந்த வழியாக வேகமாக பைக்கில் வந்த ஒரு மர்ம கும்பல் முருகேசனை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு இனி உயிர் பிழைக்க முடியாது என்பதை உறுதி செய்து கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதனால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
கொலை நடந்த சில மணி நேரத்தில் புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கருப்பட்டிப்பட்டி கள்ளர் தெரு சக்திவேல் மகன் ஐயப்பன் (19), கர்ணன் மகன் முகசீலன் (19) ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் ஐயப்பன் கூறும் போது, முருகேசன் உறவுக்காரப் பெண்ணை எனது நண்பன் காதலித்து அழைத்துச் சென்றான். ஆனால் முருகேசன் உறவினர்கள் அவர்களை பிரித்துவிட்டனர். எனது நண்பனுக்கு ஆதரவாக நாங்கள் சென்ற போது என்னை கட்டி வைத்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த அவமானத்தால் நான் திருப்பூர் சென்று அரிவாளால் வெட்ட பயிற்சி எடுத்து வந்து முருகேசனை வெட்டினேன் என்று கூறியுள்ளார். விசாரணையைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஐயப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.