2019 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கும் விழா ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நேற்று நடைபெற்றது. இதில் பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியரான அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் ஆகியோர் இந்திய பாரம்பரிய உடையில் சென்று பரிசினை பெற்றனர்.

உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான சோதனை அணுகுமுறையில் விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டதற்காக அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டுஃப்லோ மற்றும் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
இதில் அபிஜித்-எஸ்தர் தம்பதி இந்திய பாரம்பரிய உடை அணிந்து கலந்துகொண்டனர். அபிஜித் பானர்ஜி மற்றும் மனைவி எஸ்தர் டுஃப்லோ ஆகியோர் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) இல் பொருளாதார பேராசிரியர்களாக உள்ளனர். இந்த விருதை பெற்ற மற்றொருவரான கிரெமர், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக உள்ளார்.