உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை நாய் ஒன்று காப்பாற்றிய சம்பவம் தாய்லாந்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பாங்காக் பகுதியில் காலை நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிங்பாங் என்ற அந்த நாய் அதிகாலையில் தனது எஜமானருடன் விவசாய பணி நடக்கும் வயல்வெளிக்கு சென்றுள்ளது. அங்கு திடீரென எதையோ மோப்பம் பிடிக்க தொடங்கிய பிங்பாங், ஒரு இடத்தில் வேகமாக மண்ணை தோண்ட ஆரம்பித்துள்ளது.
இதன் நடவடிக்கைகளை பார்த்த அங்கிருந்த விவசாயிகள் அந்த இடத்திற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது ஒரு குழந்தையின் கால் மட்டும் மண்ணில் தெரிந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் விரைவாக அந்த இடத்தை தோண்டிய போது பிறந்து சில தினங்களே ஆன குழந்தை ஒன்று புதைக்கப்பட்டிருந்தது. அந்த குழந்தைக்கு உயிர் இருப்பதை அறிந்த விவசாயிகள் அதனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அந்த குழந்தை அதே பகுதியை சேர்ந்த 15 வயது பெண் ஒருவருடையது என்றும், விடுதியில் தங்கியிருந்த அந்த பெண் கற்பமானதை வீட்டில் மறைப்பதற்காக குழந்தை பிறக்கும் வரை விடுதியில் இருந்துள்ளார். குழந்தை பிறந்தவுடன் தனது ஊருக்கு அருகில் உள்ள இந்த கிராமத்தில் நள்ளிரவு நேரத்தில் புதைத்த விட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அந்த 15 வயது பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஒன்றில் தனது ஒரு காலை இழந்த பிங்பாங் குழந்தையை காப்பாற்றிய சம்பவம் அந்த ஊரில் பிரபலமாகி வருகிறது. பிங்பாங்கின் செயலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.