லூச்சா லிப்ரே எனப்படும் தொழில்முறை மல்யுத்தம் மூலம் பிரபலமானவர் ரே மிஸ்டீரியோ சீனியர்(66). வட அமெரிக்கவின் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் தியாஸ். ஆனால் இவர் தன்னை மல்யுத்த போட்டிகளில் ரே மிஸ்டீரியோ சீனியர் என்று அடையாளப் படுத்திக் கொண்டார். அதோடு மல்யுத்த போட்டியின்போது, தனது தனித்துவமான சண்டையை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தார்.
வேர்ல்ட் ரெஸ்லிங் எண்டர்டெயின்மென்ட்(WWE) புகழ் ரே மிஸ்டீரியோ ஜுனியரின் உறவினரான ரே மிஸ்டீரியோ சீனியர், ரே மிஸ்டீரியோ ஜுனியரின் இளம் வயதில் அவருக்கு மல்யுத்த பயிற்சியளித்துள்ளார். ரே மிஸ்டீரியோ சீனியர், உலக மல்யுத்த சங்கம் மற்றும் லுச்சா லிப்ரே AAA போன்ற உலகளாவிய முக்கிய அமைப்புகளுடன் சாம்பியன்ஷிப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இது வேர்ல்ட் ரெஸ்லிங் எண்டர்டெயின்மென்ட்(WWE) போட்டிகளுக்கு இணையாக கருதப்படுகிறது. ரே மிஸ்டீரியோ சீனியர் கடந்த 2009ஆம் ஆண்டு தொழில்முறை மல்யுத்த சண்டைகளில் இருந்து ஓய்வு அறிவித்தார். அதன் பின்பு கடைசியாக 2023ஆம் ஆண்டு குளோபல் லுச்சா லிப்ரேயில் மல்யுத்தம் போட்டியில் பங்கேற்று அதிலும் வெற்றி பெற்றிருந்தார்.
இந்த நிலையில் ரே மிஸ்டீரியோ சீனியர் காலமானதாக அவரது மகன் தி சன் ஆஃப் ரே மிஸ்டீரியோ தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரின் முகநூல் பக்கத்தில், “நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, எனது தந்தை மிகுவல் ஏஞ்சல் லோபஸ் தியாஸ், கிங் மிஸ்டீரியோ சீனியர் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.