தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (20.12.2024) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை 05.30 மணி அளவில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது கிழக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (21.12.2024) காலை 08.30 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், விசாகபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு - தென்கிழக்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- வடகிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும், கோபல்பூரிற்கு (ஒரிசா) தெற்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது, அடுத்த 12 மணி நேரத்தில், கிழக்கு - வடகிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மெதுவாக நகர்ந்து, அதன் பிறகு, கடலில் படிப்படியாக வழுவிழக்கக்கூடும்.
எனவே இன்றும், நாளையும் (22.12.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை மறுநாள் (23.12.2024) மற்றும் 24ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.