தென் ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கேப்டவுனில் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகரித்து வரும் சூழலில், அந்நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு ஒன்றை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.
உலகில் முதன்முறையாக பெருநகரமான கேப்டவுனில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படப் போவதாக செய்திகள் வெளியாகின. நாளுக்கு நாள் அந்த நகரத்தில் தண்ணீர் தீர்ந்து வந்த நிலையில், குறைவான அளவிலேயே நீரைப் பயன்படுத்துமாறு அந்நாட்டு அரசு பொதுமக்களை அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், வரும் ஜூலை 9ஆம் தேதிக்குள் அந்நகரத்தில் தண்ணீர் முழுவதுமாக தீர்ந்துபோகும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் 90 விநாடிகளுக்கு மேல் குளிக்கவேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மேலும், குளித்துவிட்டு துவட்டும் துண்டுகளைத் துவைக்கவேண்டாம் எனவும் அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனாலும், தென் ஆப்பிரிக்காவில் உள்ள மற்ற பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் இல்லையென்றும் அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது.