ஒரு வாரமாக ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. தொடர் போர் சூழல் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வரும் நிலையில் தொடர் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி முன்னேறி வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே கடந்த திங்கட்கிழமை பெலாரஸ் நாட்டில் உள்ள கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இறுதி முடிவு எதுவும் எட்டப்படாமல் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
கடந்த 9 நாட்களாக போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மீட்புப்பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ரஷ்யா. மாணவர்களை மீட்பதற்காக போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியிருந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் வோல்னோவாகா, மரியுபோல் ஆகிய இரண்டு நகரங்களில் இந்த தற்காலிக போர் நிறுத்த முடிவை ரஷ்யா எடுத்துள்ளது. இந்திய நேரப்படி காலை 11.30 மணியிலிருந்து இந்த தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.