உலகின் இளம் வயது பிரதமராக பதவியேற்று பலரின் கவனத்தையும் பெற்றவர் சன்னா மரின்.

கடந்த மாதம் பின்லாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்ற சன்னா மரின், "இனி பின்லாந்து நாட்டில் நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம்தான் வேலை, வாரத்துக்கு 4 நாட்கள்தான் வேலை, 3 நாட்கள் விடுமுறை" என அறிவித்ததாக தகவல்கள் பரவின. இது உலக அளவில் பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த தகவல் தவறானது என பின்லாந்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த பின்லாந்து நாடு அரசாங்கத்தின் விளக்கத்தில், "பின்லாந்து அரசாங்கத்திடம் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற எந்த திட்டமும் இல்லை. சன்னா மரின் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இதுபோன்ற ஒரு சுருக்கமான யோசனையை கொடுத்தார். ஆனால் தற்போது அவர் அதனை செயல்படுத்துவது தொடர்பாக நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.