பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, இரசாயனம் மூலமாக ஆண்மையை நீக்கும் சட்டத்திற்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம், தனது இரு குழந்தைகளுடன் காரில் சென்றுகொண்டிருந்த பெண் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து அப்போது பேசிய அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான், பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது ஆண்மைநீக்க தண்டனை வழங்குவதே இம்மாதிரியான சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களின் ஆண்மையை இரசாயனம் மூலமாக நீக்கும் சட்டத்தை உருவாக்கி, அந்தநாட்டின் அதிபர் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தது. இந்தநிலையில் அச்சட்டத்திற்கு பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.