உக்ரைன் மீது தாக்குதல் நடத்த நேற்று காலை ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டநிலையில், ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தீவிரமான தாக்குதலை நடத்தி வருகின்றது. போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும், ஏவுகணைகள் மூலமும் தொடர் தாக்குதல் நடந்து வருவதால், உக்ரைன் மக்கள் மெட்ரோ நிலையங்களில் இருக்கும் வெடிகுண்டு பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும் ரஷ்ய இராணுவ வாகனங்கள் உக்ரைனின் தலைநகர் கீவ்-க்குள் நுழைந்துள்ளன. விரைவில் கீவ் நகரை ரஷ்யா கைப்பற்றும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்தநிலையில் உக்ரைன் இராணுவம் ஆயுதங்களை கீழே போட்டால் உக்ரைனுடன் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யா, உக்ரைனை அடக்குமுறையிலிருந்து விடுவிக்க விரும்புவதாகவும், மேற்கத்திய நாடுகளின் பொருளாதர தடைகளுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் எனவும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.