கரோனா காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்தும் அதை எப்படி சீர்செய்வது என்பது குறித்தும் விவாதிப்பதற்கான சர்வதேசக் கருத்தரங்கத்தை, காணொளி மூலம் வேர்ல்ட் ஹூமானிட்டேரியன் அமைப்பின் (World Humanitarian Drive) மலேசிய கிளை ஏற்பாடு செய்திருந்தது.
ஜெர்மனி, ரஷ்யா, ஃப்ரான்ஸ் உட்பட பல நாடுகளைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்தை முன்னெடுக்கும் அமைப்புகளின் சர்வதேசப் பிரதிநிதிகளும், மலேசியத் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சர்வதேச வாழ்வியல் மற்றும் மனநல ஆலோசகரான டாக்டர் ஃபஜிலா ஆசாத்தும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். எந்த ஒரு பிரச்சனையான சூழலையும் சமாளித்து எப்படி வெற்றி காண்பது? எதிர்வரும் பிரச்சனைகளை எளிதாக்கி மகிழ்ச்சியான மனநிலையை எப்படி தக்க வைத்துக்கொள்வது? என்ற சூட்சுமத்தையும், நேர்மறை எண்ணங்களும் நேர்மறை வார்த்தைகளும் வாழ்வில ஏற்படுத்தும் நன்மைகளையும், பற்றி ஆதாரங்களுடன் டாக்டர் ஃபஜிலா ஆசாத் எடுத்துரைத்து அனைவரையும் கவர்ந்தார்.
வார்த்தைகளுக்கும் மூளையின் செயல்பாடுகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதை, விளக்கிய டாக்டர் ஃபஜிலா ஆசாத், தமிழகத்தில் வெகு காலத்திற்கு முன்பே ‘மாற்றுத் திறனாளிகள்’ என்ற சொல் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது என்றும், அதன்மூலம் தமிழகத்தில் மட்டுமன்றி அதனைப் பின்பற்றி இந்தியா முழுவதிலும், சமூதாயத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் உலக அரங்கில் எடுத்துரைத்தார். மேலும் அவர் கூறும்போது, பத்து ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் அரசாங்க வேலைவாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முன்னெடுத்ததையும் அதுவே பின்னாட்களில் சட்டமாக அமல் படுத்தப்பட்டதையும் எடுத்துரைத்தபோது சர்வதேச மாற்றுத்திறனாளி தலைவர்கள் தமிழகத்தில் எடுக்கப்பட்டுவரும் சமூக அக்கறைக்கான முன்னெடுப்புகளை அறிந்து வியப்பு தெரிவித்தனர்.
அதேபோல் இன்றைய கரோனா காலகட்டத்திலும் மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகளையும் சிரமங்களையும் புரிந்துகொண்டு அவர்களுடைய இயல்பு வாழ்க்கை சீராக இருப்பதற்கான நடவடிக்கைகளை இபோதைய தமிழக அரசும், தொண்டு நிறுவனுங்களும் முன்னெடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டவர், மாநில அளவிலும் உலக அளவிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேவைகளை உடனடியாக ஆவண செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ள, அதை அரங்கம் ஆரவாரித்து வரவேற்றது. மனிதனின் உறுப்புக்களிலேயே கண்ணுக்கு தெரியாத உயர்ந்த உறுப்பு நம்பிக்கைதான் என்பதை இந்த அரங்கம் உலகிற்கு போதிப்பதாக அமைந்தது.