Skip to main content

 நீட்,  நெக்ஸ்ட் இரண்டு தேர்வுகளையும் எதிர்ப்போம்- நாராயணசாமி உறுதி

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு  நேர்காணல் அளித்தபோது கூறியதாவது:-

’’மாநில பாடத்திட்டத்தில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வினால் பாதிப்பு ஏற்படும் என்பதால் நீட் தேர்வினை ரத்துசெய்யக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். புதுச்சேரி சட்டமன்றத்திலும் நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் மத்திய அரசு அதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லாமல் காலம் தாழ்த்தி வருகிறது. தற்போது நாடாளுமன்றத்திலும் தமிழக, புதுச்சேரி எம்.பி.க்கள் நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

 

n


இதற்கிடையே மத்திய அரசு தேசிய மருத்துவ கவுன்சில் அமைக்க அமைச்சரவையில் முடிவு செய்துள்ளது. அதற்கான சட்ட வரையறை தயார் செய்து தாக்கல் செய்ய முயற்சி செய்து வருகிறது. இதனால் புதுச்சேரி, தமிழக மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். தற்போது கல்வியானது மத்திய, மாநில அரசுகளின் பட்டியலில் உள்ளது. அதை படிப்படியாக மத்திய அரசின் பட்டியலுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 

அதற்கு முதல்கட்ட முயற்சிதான் இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் எனப்படும் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்று ஒன்றை புகுத்த உள்ளனர். 4½ ஆண்டுகள் மருத்துவ படிப்பு படித்துவிட்டு அதன்பின் தேர்வு எழுத வேண்டும் என்றால் மருத்துவ கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தேவையா? என்ற கேள்வி எழும்புகிறது. எல்லா அதிகாரங்களும் மத்திய மருத்துவ கவுன்சிலுக்கே சென்று சேருகிறது. 


இது ஜனநாயகத்துக்கு பேரிழப்பு. இந்த தேர்வின் மூலம் மாநில அரசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது. இதனை நாங்கள் எதிர்க்கிறோம். காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள். நீட், நெக்ஸ்ட் என்று தேர்வுகளை கொண்டு வந்து மத்திய அரசு மாணவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. இந்த தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர், உள்துறை மந்திரி, மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுத உள்ளேன்.

 

மருத்துவ மாணவர்களுக்கு இப்போது நடத்தப்படும் தேர்வு முறையே சிறப்பாக உள்ளது. அதை மாற்றி இறுதியாண்டில் பொதுத்தேர்வு எழுதுவது என்பதை ஏற்க முடியாது. இதுகுறித்து புதுவை சட்டமன்றத்திலும் விவாதிக்கப்படும்.’’

சார்ந்த செய்திகள்