அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த வர்த்தக போர் கடந்த ஆண்டு உச்சகட்டத்தை எட்டியது.
இந்த வர்த்தக போரின் உச்சகட்டமாக சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 30,000 கோடி டாலர் வரிவிதித்து உத்தரவிட்டார் டிரம்ப். இதற்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 6000 கோடி டாலரை வரியாக விதித்தது சீனா. இப்படி இரு நாடுகளுக்குமிடையே வர்த்தக போர் உச்சத்தில் இருக்கும் நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது மேக் ப்ரோ கணினியின் உற்பத்தியை சீனாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது.
இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட், ஐபோன் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் ஏற்கனவே சீனாவில் தான் தயாராகி வருகின்றன. மேக் ப்ரோ கணினியின் தயாரிப்பு மட்டுமே அமெரிக்காவில் நடந்து வருகிறது. தற்போது அதனையும் சீனாவுக்கு மாற்றும் யோசனையில் ஆப்பிள் நிறுவனம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரம்ப், நேரடியாக தனது ட்விட்டர் மூலமாக ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரியான டிம் குக்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப் தனது பதிவில், "ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் இருந்து தனது உற்பத்திக் கூடத்தை சீனாவுக்கு மாற்றினால், ஆப்பிள் நிறுவனத்திற்கு வரிச்சலுகை ஏதும் கிடைக்காது. அதற்கு பதிலாக கடும் வரிவிதிப்பு அமல்படுத்தப்படும். அதேநேரத்தில் அமெரிக்காவில் உற்பத்தி செய்தால், எந்த வரியும் விதிக்கப்படாது" எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சீனாவில் உள்ள ஆப்பிள் பொருட்களின் உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்ற வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.