ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளைஉள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16வது உச்சிமாநாடு ரஷ்யாவில் நடைபெறுகிறது. ரஷ்யாவில் உள்ள கசான் பகுதியில் இன்று (22-10-24) மற்றும் நாளை (23-10-24) நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரஷ்யா புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அப்போது விளாதிமிர் புதினுடன் பேசிய பிரதமர் மோடி, “ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையில் அனைத்து தரப்பினருடனும் நாங்கள் தொடர்பில் இருந்தோம். எல்லா முரண்பாடுகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்பதே எங்களின் நிலைப்பாடு. மோதல்களுக்கு அமைதியான தீர்வுகள் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அமைதியை நிலைநாட்ட இந்தியா எப்போதும் தயாராக உள்ளது” என்று கூறினார்.