பாகிஸ்தானிலுள்ள சிந்து மாகாணத்தில் ஜகோபாத் மாவட்டத்தில் பதினைந்து வயதே ஆன இந்து சிறுமி மேஹக்குமாரி இசுலாமிய மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்து அலிராசா என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
கடந்த ஜனவரி 15ஆம் தேதி, மேஹக்குமாரி தன்னுடை விருப்பதின்பேரில்தான் இசுலாமிற்கு மாறியதாகவும், தன்னுடைய பெயரை அலிசா என்று மாற்றிக்கொண்டதாக தெரிவித்திருந்தார். இதன்பின்பு தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்ட சிறுமி, இதுகுறித்து நீதிமன்றத்தில் பேசியபோது, தனக்கு நடைபெற்ற திருமணத்தில் விருப்பமில்லை, இந்துவாக தன்னுடைய பெற்றோருடன் வாழவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேஹக்குமாரிக்கு நடைபெற்ற அநீதியை கண்டிக்கும் விதமாக பாகிஸ்தான் கராச்சியில் ஆல் பாகிஸ்தான் இந்து பஞ்சாயத் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் நேற்று லண்டனிலுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு முன் பாக். சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் இந்தியாவை சேர்ந்த சிலர் கலந்துகொண்டனர்.
பாகிஸ்தானிலுள்ள சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறையை கண்டிக்கும் விதமாகவும், மேஹக்குமாரி தனியாக போராடவில்லை அவருக்காக போராட இவ்வளவு பேர் இருக்கின்றோம் என்பதை உணர்த்ததான் இப்போராட்டம் என்று போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.