ஆப்பிரிக்காவின் வனப்பகுதியில் இறந்த கிடந்த யானைகளின் உடல்களை உண்டதால் 500க்கும் மேற்பட்ட அரிய வகை கழுகுகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா பகுதியில் வேட்டையர்களால் கொல்லப்பட்ட 3 யானைகள் இறந்து கிடந்துள்ளன. இந்த யானைகளின் சடலங்களை சாப்பிட்ட 537 கழுகுகள் உயிரிழந்துள்ளன. கழுகுகளின் மரணம் குறித்து பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், வேட்டையாடப்பட்ட மூன்று யானைகளின் உடல்களிலும் நச்சுத்தன்மை கலந்துள்ளது. எனவே இதனை உண்ட கழுகுகள் விஷத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் இயற்கைப் பாதுகாப்பில் சிவப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள அழிவின் விளிம்பிலிருக்கும் கழுகு இனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து முழுவீச்சில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓர் உயிரினம் இறந்துவிட்டாலோ அல்லது இறக்கும் தறுவாயில் இருந்தாலோ, கழுகுகள் வானத்தில் வட்டமடிக்கும். இதனை பார்த்த வனத்துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு செல்வார்கள். இதனால் வேட்டைக்காரர்கள் பல முறை சிக்கியுள்ளனர். எனவே கழுகுகளை அழித்துவிட்டால் வனத்துறை அதிகாரிகளுக்கு இறந்த விலங்குகள் குறித்து கண்டறிவது கடினம் என்பதால் திட்டமிட்டு கழுகுகளை கொல்ல விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.