வனவிலங்கு பூங்காவில் இருக்கும் உரங்கொட்டான் குரங்கு ஒன்று சிகரெட் புகைக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இந்தோனிசியா நாட்டில் இருக்கிறது பாண்டுங் வன உயிரிகள் பூங்கா. இங்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் விலங்குகளைப் பார்க்க செல்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை, குரங்கு இருக்கும் பகுதிக்கு தூக்கி வீசுகிறார். இதை கவனித்துக் கொண்டிருந்த போர்னியன் உரங்கொட்டான் குரங்கு, வேகமாக அதை எடுத்துச்சென்று, புகைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இது மிகவும் வருந்தத்தக்க செயல் எனக்கூறியுள்ள பூங்காவின் செய்தி தொடர்பாளர், 'வனவிலங்குகளுக்கு பார்வையாளர்கள் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு தடை விதித்திருக்கிறோம். இந்த சம்பவம் நடந்த சமயத்தில் ஊழியர்கள் கழிவறைக்கு சென்றிருக்கலாம்’ என தெரிவித்திருக்கிறார்.
தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து பல விலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விலங்குகளைக் கவனிக்காத அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது என அவர்கள் முழக்கம் எழுப்பியுள்ளனர்.
இதற்கு முன்னர் இதே பூங்காவில் ஸ்கெலிட்டல் சன் வகைக் கரடிகள் உணவுக்காக பார்வையாளர்களிடம் பிச்சை எடுப்பதும், சொந்த மலத்தையே உண்ணுவது போன்ற காட்சிகளும் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்தது குறிப்பிடத்தக்கது.