
ஓசூரில் தேனீக்கள் கொட்டி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓசூர் உரிகம் பகுதி அருகே உள்ளது கோவல்லி என்ற கிராமம். அங்கு பழமை வாய்ந்த மாதேஸ்வரன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. ஒவ்வொரு திங்கட்கிழமை நாட்களிலும் அந்த பகுதி பொதுமக்கள் கோவிலில் ஒன்றுகூடி வழிபாடு செய்வது வழக்கம். இந்தநிலையில் இன்று (21/04/2025) திங்கட்கிழமை என்பதால் வழக்கம் போல அந்த பகுதி கிராம மக்கள் ஒன்றாக கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொங்கல் வைப்பதற்காக அந்த பகுதியில் அடுப்பு வைத்து தீ மூட்டியுள்ளனர். அப்பொழுது வெளியேறிய புகை அந்த பகுதியில் இருந்த மரம் ஒன்றிலிருந்த தேன் கூட்டை கலைத்துள்ளது. இதில் அங்கிருந்த அனைவரையும் தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டியது. இதில் உரியம் கிராமத்தைச் சேர்ந்த மாதேவன் (56) என்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் ரித்தேஷ் (18) என்ற இளைஞரை 20 இடங்கள் தேனீக்கள் கொட்டி படுகாயத்துடன் மீட்கப்பட்டார். மொத்தமாக பெண்கள், ஆண்கள், சிறார்கள் என பத்துக்கும் மேற்பட்டவர்கள் தேனீக்கள் கொட்டி காயமடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.