நேபாள வரைபட விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் கருத்து கூறாமல் இருக்குமாறு அதிகாரிகள் அவருக்கு எடுத்துக்கூறுங்கள் என நேபாள பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சில பகுதிகளை தங்களது எல்லைக்குள் சேர்த்து நேபாளம் புதிய வரைபடம் ஒன்றை அண்மையில் வெளியிட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட சர்ச்சையால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் இதுகுறித்து கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "அரசியல் எல்லையை நிர்ணயிக்கும் முன்னர் நேபாளம் விளைவுகளை பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். திபெத்துக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்வது நலம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, “உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேபாளம் பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார். அவரது கருத்துகள் நியாயமற்றவை, முறையற்றவை. மத்திய அரசில் பொறுப்புள்ள பதவியிலிருக்கும் யாராவது, அவருக்கு சம்பந்தமில்லாத விஷயத்தில் நுழைந்து கருத்துகள் கூறுவது முறையல்ல என்று அவரிடம் எடுத்துச் சொல்லுங்கள். நேபாளத்தை மிரட்டும் பேச்சு நிச்சயம் கண்டிக்கப்படும்” என்றார்.