Skip to main content

"கைகுலுக்க முடியாது"... சிரிப்பலைகளை ஏற்படுத்திய அமைச்சரின் பிடிவாதம்... வைரலாகும் வீடியோ...

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் காரணமாக அச்சம் எழுந்துள்ள சூழலில், கரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக பல்வேறு நாட்டு அரசாங்கங்களும், கைகுலுக்குதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டுமென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், ஜெர்மனியில் நடைபெற்ற அமைச்சர்கள் உடனான கூட்டத்தில் ஜெர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு, அந்நாட்டு உள்துறை அமைச்சர் கைகொடுக்க மறுத்தது சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

 

Angela Merkel was refused a handshake by German Minister

 

 

சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து, ஈரான், அமெரிக்கா, இத்தாலி என பல உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 60 நாடுகளில் இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலான நாடுகளில் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில், கைகுலுக்குதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் ஆகியவை தவிர்த்து வரப்படுகின்றன.

இந்நிலையில், ஜெர்மனியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல், அங்கு அமர்ந்திருந்த உள்துறை அமைச்சருக்கு மரியாதை நிமித்தமாக கைகுலுக்க கைகளை நீட்டினார். ஆனால் அமைச்சரோ, கொரோனா தற்பாதுகாப்புக்காக கைகொடுக்காமல் தலையை மட்டுமே அசைத்து மரியாதையை தெரிவித்தார். இதனைக் கண்டு புரிந்துகொண்ட  ஏஞ்சலா மெர்க்கலும், தனது சிரிப்பை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் சிரித்தபடியே, தலையை அசைத்து மரியாதை செய்தார். மேலும், "தாங்கள் செய்தது சரிதான்" என கூறி அமைச்சரையும் பாராட்டினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்