சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து, ஈரான், அமெரிக்கா என பல உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ள சூழலில், உலக நாடுகள் பலவும் இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2663 ஆக அதிகரித்துள்ளது. தினசரி பலி எண்ணிக்கை குறைந்துள்ளதோடு, புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தென்கொரியாவில் இந்த கோவிட் 19 காரணமாக இதுவரை 893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 8 பேர் பலியாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இத்தாலியில் இதுவரை இந்த வைரஸ் தொற்றால் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த வைரஸ் குறித்த அச்சத்தால் இத்தாலியின் மிலன் நகரம் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது.