பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார்.
அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். மேலும் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்தும் விவாதித்தார். அன்றைய தினமே அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் 75 அமெரிக்க எம்.பிக்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதில், இந்தியாவில் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து மோடி உடனான சந்திப்பின் போது கேள்வி எழுப்புமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், மோடியின் அமெரிக்க நாடாளுமன்ற உரையை இரண்டு எம்.பிக்கள் புறக்கணிக்கப்போவதாகத் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து மோடி இரண்டு நாட்கள் பயணமாக தற்போது எகிப்து நாட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் எகிப்து சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான நைல் விருதை அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபத்தா வழங்கியுள்ளார்.