ஜம்மு காஷ்மீரைச் சர்ச்சைக்குரிய பகுதி என்றும், சர் கிரீக் மற்றும் குஜராத்தின் ஜுனாகத்தை பாகிஸ்தானுடையது என்றும் கூறி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் வெளியிட்டுள்ள வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் சில பகுதிகள் தங்களுக்கு சொந்தமானவை என சீனாவும், நேபாளமும் ஒருபக்கம் எல்லைப் பிரச்சனையில் ஈடுபட்டிருக்க, மறுபுறம் பாகிஸ்தானும் தனது பங்கிற்கு புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நேற்று மாலை பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட பாகிஸ்தானின் வரைபடம் ஒன்றில், ஜம்மு காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்றும், சர் கிரீக் மற்றும் குஜராத்தின் ஜுனாகத் பாகிஸ்தானுடையது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய வரைபடத்தில் இஸ்லாமாபாத்தின் முக்கியமான சாலையான காஷ்மீர் சாலை, ஸ்ரீநகர் ஹை வே என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல, இந்த வரைபடத்திற்கு பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த வரைபடம் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் என்றும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுடனான நீண்டகால எல்லைப் பிரச்சனைகளைத் தீர்க்க பாகிஸ்தான் இராஜதந்திர முயற்சிகளைத் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.