உலகளவில் ஸ்மார்ட்ஃபோன்களை உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோடிக்கணக்கான இளைஞர்கள் அதிகளவில் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்குக் காரணம் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், வீடியோ கால் மூலம் பேசும் வசதி, ஆன்லைன் வகுப்புகள், வீடியோ கால் மூலம் நடத்தப்படும் கருத்தரங்குகள், பாடங்கள் குறித்த சந்தேகங்களை அறிந்துகொள்ள இணையதளம் மூலம் தேடுவதும் ஆகும்.
இதனால் ஸ்மார்ட்ஃபோன்களை தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும், நொடிக்கு நொடி புதிய வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக, உலகளவில் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில், உள்நாட்டுத் தயாரிப்பிலேயே தயாராகும் ஸ்மார்ட்ஃபோன்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு என்ன காரணம் என்றால், அனைத்து புதிய வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்ஃபோன்களின் விலை குறைவாக இருப்பதே ஆகும்.
தற்போது, இந்தியாவில் ரெட்மி, விவோ, ஓப்போ உள்ளிட்ட ஸ்மார்ட்ஃபோன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதுதவிர, சில முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட்ஃபோன்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டாத சூழலில், கடுமையான நிதி நெருக்கடி காரணமாக, பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கி வருகின்றன அந்நிறுவனங்கள்.
இந்த நிலையில் டி.வி., ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஸ்மார்ட்ஃபோன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் எல்.ஜி. நிறுவனம், ஸ்மார்ட்ஃபோன்களின் உற்பத்தியை நிறுத்துவதாகவும், ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் இருந்து வெளியேறுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை 31ஆம் தேதியுடன் ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பை நிறுத்துகிறது எல்.ஜி. நிறுவனம். மேலும், எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில், எல்.ஜி. நிறுவனம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.