உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 45 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 82,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இந்தியாவில் தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. இதே போன்று வளர்ந்த நாடுகளிலும் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்நிலையில் மலேசியாவில் பல வாரங்களாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு தற்போது தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் வியபாரிகள் தங்களின் கடைகளை திறந்துள்ளனர். அப்படி சமீபத்தில் தோல் பொருட்களை விற்பனை செய்யும் கடையை திறந்த உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கைப்பைகள், ஷூ, பெல்ட் போன்ற தோலால் ஆன பொருட்கள் பூஞ்சை முளைத்து காணப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அதனை முடிந்த அளவு சுத்தம் செய்து மீண்டும் விற்பனைக்கு வைத்துள்ளனர். சில பொருட்கள் மீண்டும் பயன்படுத்தாத வகையில் பாழடைந்து இருந்துள்ளது. கரோனா தொற்று ஒருபுறம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்றால், தற்போது பொருளாதாரத்திலும் சிக்கல் எழுந்துள்ளதாக வியபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள். இதையும் தாண்டி சினிமா தியோட்டர்களில் எலிகள் சீட்டை சேதப்படுத்தியுள்ளதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.