கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஒருவார காலமாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிகளவில் பரவி வரும் கரோனா, அந்நாட்டின் அதிபர் மாளிகையையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை அமெரிக்க அதிபர் மாளிகையில் பணியாற்றும் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஒருவார காலமாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டு வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின், பின்விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த சூழலில், அந்த மருந்தையே தான் எடுத்துக்கொள்வதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அதிபர் ட்ரம்ப், "கரோனா வைரஸுக்கு எதிர்மறையாகவே இதுவரை எனது பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. எனக்கு கரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இல்லை. சுமார் ஒன்றரை வாரங்களாக ஒரு தடுப்பு நடவடிக்கையாக இந்த மருந்தை உட்கொண்டுவருகிறேன். நான் ஒவ்வொரு நாளும் ஒரு மாத்திரை எடுத்துக்கொள்கிறேன். மேலும், சுகாதார ஊழியர்கள் பலரும் இந்த மருந்தை எடுத்துக்கொள்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.