கரோனா வைரஸ் நாட்கள் செல்லச் செல்ல அதன் தீவிரத்தை இழக்கும் வாய்ப்புள்ளதாக இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் முடங்கியுள்ள நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் பல நாடுகள் ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில், உலக மக்களின் மொத்த எதிர்பார்ப்பும் இந்த கரோனா பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்பதாகவே உள்ளது. இந்த சூழலில், கரோனா வைரஸின் தீவிரத்தன்மை குறித்து இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து மிலன் நகரில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையின், நுண்ணுயிரியல் மற்றும் வைராலஜி பிரிவின் இயக்குநர் மஸ்ஸிமோ க்லெமெண்டி கூறுகையில், "கரோனா வைரஸின் ஆரம்ப காலகட்டத்தை ஒப்பிடும் போது, அதன் தீவிரத்தன்மை தற்போது குறைந்துள்ளது. ஆரம்பத்தில் அவசர சிகிச்சை பிரிவு கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிந்தது. ஆனால், தற்போது நோய் தொற்று எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. வைரஸ் அதன் தீவிரத்தை இழந்து மனிதர்களுடன் வாழப் பழகிவிட்டது அல்லது மனிதர்கள் வைரஸுடன் வாழும் அளவுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற்றுவிட்டார்கள் என்று சொல்லலாம். அதேபோல வெப்பநிலையால் கரோனாவின் தீவிரத்தன்மை குறையும் என்பது நிரூபிக்கப்படாத ஒரு விஷயம் ஆகும். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல வைரஸ் அதன் தீவிரத்தை இழக்கும் என்று நம்புகிறோம். சளியை ஏற்படுத்தும் ஒரு சாதாரண வைரஸ் போலவே கரோனா வைரஸும் மாற்றம் அடையும்" எனத் தெரிவித்துள்ளார்.