
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்குச் சுற்றுலாச் சென்ற பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஒரு பயங்கரவாத கும்பல், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் மத்திய அரசு எடுத்தது. அதே வேளையில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும் தொடர் நடவடிக்கைகளை எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தேசியப் பாதுகாப்பு ஆலோசனை குழுவை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. அதன்படி இந்திய உளவுத்துறையின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழுவின் உறுப்பினர்களாக ராணுவ மற்றும் பாதுகாப்பு பிரிவு சேவைகளில் இருந்து ஓய்வு பெற்ற 7 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மேற்கு மண்டல விமானப்படையின் முன்னாள் தளபதி ஏர் மார்ஷல் பி.எம். சின்ஹா, தெற்கு மண்டல முன்னாள் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங் மற்றும் அட்மிரல் மோன்டி கன்னா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ராஜீவ் ரஞ்சன் வர்மா மற்றும் மன்மோகன் சிங் ஆகிய இருவரும் இந்திய காவல் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற 2 உறுப்பினர்கள் ஆவர். பி. வெங்கடேஷ் வர்மா 7 பேர் கொண்ட குழுவில் ஓய்வு பெற்ற ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஆவார்.