இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 8 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. காசாவிற்கு கொடுக்கும் பதிலடி ஹமாஸ் அமைப்பிற்கு மட்டுமல்ல, நமது எதிரிகள் கூட மறக்க முடியாத நினைவாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்து அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினரை விட ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொள்ளப்படுவதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
இதனிடையே காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் அங்கு மின்சாரம், உணவு குடிநீர் உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பிணையக்கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம் கிடையாது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கி கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பில் உள்ள கடைசியாக இருக்கும் ஒவ்வொருவரையும் வேட்டையாடுவோம் என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது.
நேற்று வரை ஹமாஸ் அமைப்பினர் இருக்கும் காசா நகர கட்டிடங்கள் மீது பீரங்கி குண்டுகளால் வான்வழி தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், தற்போது தரை வழி தாக்குதலை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக காசாவை சுற்றி சுமார் 3 லட்சம் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டு தாக்குதல் நடைபெற்று வருகிறது. காசா நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்குள்ளும் புகுந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. இதுவரை உயிரிழந்த பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், இஸ்ரேலின் தரை வழி தாக்குதலால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.