/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sl-minister-art.jpg)
தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும் தற்போது அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இலங்கை கடல் தொழில் துறை அமைச்சர் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியா - இலங்கை மீனவர்கள் விவகாரத்தில் பேச எதுவும் இல்லை. பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்தது. யாருடனும் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை. தொழில்நுட்ப ரீதியான பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதாவது மீன்பிடி அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் இந்தியாவில் இருக்கின்ற அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் நாடுவது போன்ற பேச்சுவார்த்தைக்கு இனி செல்லப் போவதில்லை” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)