உலகில் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வட கொரியா. அதேபோல், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் சர்ச்சையில் சிக்கி வருவார். ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் வட கொரியா அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி விட்டுப் பயமுறுத்தி வருகிறது.
சில சமயம், சிரிப்பதற்குத் தடை, அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கலாச்சாரம், உடை, பாடல்கள் உள்ளிட்டவற்றுக்குத் தடை என வித்தியாசமான உத்தரவுகளை வெளியிட்டு உள்ளூர் மக்களையும் கூட அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், வடகொரியா குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிட தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பிரிட்டன், அமெரிக்கர்களின் விருப்ப உணவாக இருக்கும் ஹாட் டாக்(HotDogs) உணவை வடகொரியா மக்கள் சாப்பிடவோ, தயாரிக்கவோ கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம். ஹாட்டாக் என்பது ரொட்டி துண்டுக்கு நடுவில் வறுத்த அல்லது வேகவைத்த இறைச்சியை வைத்துச் சாப்பிடும் உணவுப் பொருளாகும். இந்த நிலையில் ஹாட் டாக் உணவுக்கு வடகொரியா அரசு தடை விதித்துள்ளது. மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.