இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், கடந்த 30 வருடங்களாக தமிழக மீனவர்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சனையாக உள்ளது. தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ,புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். அப்போது, எல்லை தாண்டி வந்துவிட்டதாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று இலங்கை அரசு சார்பில் பல முறை உத்தரவாதங்கள் அளித்தும், இதுவரை பலன் கிடைத்தபாடில்லை. பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். தமிழக மீனவர்களின் படகுகளை உடைப்பது, மீன் வலைகளைக் கிழிப்பது போன்ற வன்முறை செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒருவித பயத்துடன் தான், தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை நடந்த ஒரு சம்பவம், தமிழக மீனவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. எப்போதும், எல்லை தாண்டியதாக கூறி தமிழக மீனவர்கள்தான் கைது செய்யப்படுவார்கள். ஆனால், தற்போது அதற்கு மாறாக தூத்துக்குடி நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் 5 பேரை, இந்தியக் கடற்படை அதிரடியாக கைது செய்துள்ளது. இலங்கை கடல் எல்லையை தாண்டி, தமிழக எல்லையில் மீன் பிடித்ததாக கூறி, மார்க்ஸ் ஜூட் மாஸ்டர், ஆண்டனி ஹேமா நிஷாந்தன், இம்மானுவேல் நிக்சன், துருவந்தா ஸ்ரீலால் மற்றும் சுதீஷ் சியான் ஆகிய 5 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தூத்துக்குடி தருவை குளம் கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டு, அவர்களிடம் கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.