Skip to main content

ஊரடங்கு காலத்தில் உச்சம் தொட்ட பெண் பிறப்புறுப்பு 'சிதைப்பு'... வீடுவீடாகக் கதவைத் தட்டும் அவலம்...

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

fgm count rises in somalia

 

ஊரடங்கு காலத்தில் பெண்களின் பிறப்புறுப்பு சிதைப்பு தொடர்பான சம்பவங்கள் ஆப்பிரிக்கா நாடுகளில் பெருமளவு அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
 


பெண்களின் பிறப்புறுப்பு சிதைப்பு என்ற பெயரில் நடக்கும் இரக்கமற்ற செயல்கள் ஆப்பிரிக்கா நாடுகள் பலவற்றில் பாரம்பரிய சடங்காகவே செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த நடைமுறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பெண்களின் பிறப்புறுப்புகள் சடங்கு என்ற பெயரில் சிதைக்கப்படுவது பல நாடுகளில் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில், கரோனா காரணமாகப் போடப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களின் பிறப்புறுப்பு சிதைப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

பள்ளிச் செல்லும் பதின்பருவ பெண்களின் பிறப்புறுப்பின் வெளிப்புற பகுதியை நீக்குவது அல்லது முழுவதுமாகத் தைத்துவிடுவது போன்ற இந்தச் செயலால் அவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் வலியாலும், குழந்தை பிறப்பின் போது பிரச்சனையையும் சந்திக்க நேரிடுகிறது. உரிய மருத்துவ வசதிகள் கூட ஏதுமின்றி, மயக்க மருந்து பயன்பாடு கூட இன்றி, அந்தந்த பகுதிகளில் உள்ள முதியவர்கள், பெண் குழந்தைகளுக்கு இந்தச் சிதைப்பு செயல்முறையை மேற்கொள்கின்றனர். பெண்களுக்கு எதிரான மிகக்கொடிய வன்முறையாகப் பார்க்கப்படும் இந்தச் செயல் சோமாலியாவில் தற்போது பள்ளிகள் விடுமுறையில் உள்ளதால் பெருமளவு அதிகரித்துள்ளது.
 

 


பள்ளி விடுமுறை என்பதால் இதனைத் தற்போதே செய்துவிட்டால் பள்ளி செல்வதற்குள் குழந்தைகளின் உடல்நலம் தேறிவிடும் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் இதனை அதிக அளவில் செய்ய ஆர்வம் காட்டி வருவதாகக் கூறுகின்றனர் அங்குள்ள சமூக ஆர்வலர்கள். இதன் காரணமாகப் பெண்ணுறுப்பு சிதைப்பைத் தொழிலாகச் செய்பவர்கள் வீடுவீடாகச் சென்று கதவைத் தட்டி, இந்தச் சடங்கைச் செய்ய வேண்டுமா எனப் பெற்றோர்களிடம் கேட்டு தற்போது செய்து வருகின்றனர். சோமாலியாவில் உள்ள சுமார் 98 சதவீதம் பெண்கள் இந்தப் பிறப்புறுப்பு சிதைப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் தன்னார்வலர் அமைப்பு ஒன்று, உலகளவில் 20 கோடி பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. 

 


 

சார்ந்த செய்திகள்