புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் கோட்டைப்பட்டினம் துறைமுகத்தைச் சார்ந்த மீனவர்கள், கடந்த 18-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றபோது அவர்கள் சென்ற படகை இலங்கை கடற்படையினர் தாக்கியதோடு விசைப்படகுகளையும் சேதப்படுத்தினர். மீன்பிடித்துக் கொண்டு 19-ஆம் தேதி அவர்கள் வந்திருக்க வேண்டிய நிலையில், காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
காணாமல்போன மீனவர்களின் உடல் மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த துயரச் சம்பவத்தில் 4 மீனவர்கள் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் ரூபாய் அறிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தாக்குதல் சம்பவம் குறித்து இந்தியத் தூதரகம் மூலமாக உரிய விசாரணை நடத்த பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும், அரசு விதிகளுக்கு உட்பட்டு உயிரிழந்த நான்கு மீனவர் குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை அல்லது அரசு நிறுவனங்களில் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே உத்தரவுப்படி ஒரு விசாரணைக் குழுவும், கடற்தொழில் அமைச்சகத்தின்கீழ் ஒரு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்யாமல் இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.