உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை தன்வசப்படுத்திக் கொண்டார். ட்விட்டரை வாங்கியதுமே சர்ச்சை மற்றும் கேலிகளுக்கு உள்ளாகும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் எலான் ஈடுபட்டு வந்தார்.
அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவி ஒரு நாய்க்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதோடு, சி.இ.ஓ என அச்சிடப்பட்டுள்ள டி-சர்ட்டுடன் அந்த நாய் கண்ணாடி அணிந்து ஆவணங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் காலங்காலமாக இருந்த ட்விட்டர் தளத்தின் லோகோவான ‘நீலக் குருவி’யை மாற்றி விட்டு கடந்த மாதம் 4ஆம் தேதி நாய்க்குட்டியின் புகைப்படத்தை ட்விட்டர் லோகோவாக மாற்றினார் எலான் மஸ்க். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் மீண்டும் ட்விட்டரின் பழைய லோகோவான குருவியை மாற்றினார் எலான் மஸ்க்.
இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்திற்கு புதிய பெண் தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'புதிய பெண் சிஇஓ 6 வாரங்களில் தனது பணியை துவங்குவார். தயாரிப்பு மென்பொருள் நிர்வாகத் தலைவர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தலைவராக தன்னுடைய பங்களிப்பு இருக்கும்' என தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கால் அறிவிக்கப்பட்டுள்ள அந்த பெண் சிஇஓ என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தின் தலைவர் லிண்டா யக்கோரினா என்று கூறப்படுகிறது.