ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான சட்டங்களில் அதீத கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் படிக்கக்கூடாது, கட்டாயம் புர்கா அணிய வேண்டும், ஆண் துணையின்றி வெளியே செல்லக்கூடாது, திருமணமான எந்த பெண்ணுக்கும் விவகாரத்து கிடையாது, ஆண்கள் முகத்தில் தாடி வைத்துக்கொள்ள வேண்டும் எனப் பல்வேறு பழமைவாதச் சட்டங்களையும் அமல்படுத்தியுள்ளது.
அதே சமயம், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானி தாலிபான் என்ற கிளர்ச்சி அமைப்பு இருப்பதாகவும், அந்த அமைப்பு தங்கள் நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருவதாகவும் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதை தொடர்ந்து, அந்த அமைப்பை குறித்து பாகிஸ்தான் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் நேற்று முன் தினம் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 46 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலால், இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.