விளையாட்டு மைதானங்களில் போட்டியைக் காணவரும் பார்வையாளர்கள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருங்கள் வேண்டும் என நெதர்லாந்து பிரதமர் எச்சரித்துள்ளார்.
உலகம் முழுவதும் பெரும்பான்மை நாடுகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு இந்த ஊரடங்கு மெல்லத் தளர்த்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், நெதர்லாந்து நாட்டில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு இயல்புநிலை திரும்பி வருகிறது. இதில் விளையாட்டுப் போட்டிகளைக் காணவும் குறைந்த அளவிலான ரசிகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், அந்நாட்டில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளைக் காணவந்த ரசிகர்கள் போட்டியைக் காணும் ஆர்வத்தில் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து ஒன்றாக நின்று பாட்டுப் பாடி மகிழ்கிறார்கள்.
ரசிகர்களின் இந்த செயலை அந்நாட்டுப் பிரதமர் மார்க் ருட்டே கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "நீங்கள் மைதானத்தில் அமர்ந்திருக்கும்போது வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருங்கள். யாரும் தேவையில்லாமல் சத்தம் போட வேண்டாம். இது அனைவராலும் முடியும். ரசிகர்களின் நடவடிக்கை முட்டாள்தனமாக இருக்கிறது. இதே நிலைமை நீடித்தால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது சிரமம்’ என்று எச்சரித்துள்ளார்.