சவுதியை சேர்ந்த பத்திரிகையாளர் கசோகி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரசையும் அதன் இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்த பத்திரிகையாளர் ஜமால் கடந்த ஆண்டு அக்.2-ம் தேதி துருக்கி பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக ஆவணங்களைப் பெற துருக்கி சென்றார். அங்கு இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரகத்தில் அவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் எட்டு பேர் குற்றவாளிகள் என்று சவுதி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத்தில் இன்று வாசிக்கப்பட்ட இந்த தீர்ப்பின்படி, குற்றவாளிகளான 8 பேரில் ஐந்து பேர் தூக்கிலிடப்படுவார்கள் எனவும், மேலும் மூன்று பேர் 24 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது. மொத்தம் 11 பேர் மீது குற்றச்சாட்டப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், 8 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இளவரசர் முகமது பின் சல்மானின் உயர் ஆலோசகர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சவுத் அல்-கஹ்தானி, உளவுத்துறை முன்னாள் உயர் அதிகாரியான அஹ்மத் அலசிரி ஆகியோரும் விசாரிக்கப்பட்டாலும், அவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.