Skip to main content

எங்கள் தடுப்பூசியை ஏற்றுக்கொள்ளுங்கள்! - நேபாளத்தை நிர்ப்பந்திக்கும் சீனா!

Published on 09/02/2021 | Edited on 09/02/2021

 

china covid vaccine

 

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு சீனா, கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில், 'சினோவாக்' என்ற தடுப்பூசியைப் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது.

 

இந்நிலையில், தங்கள் நாட்டு தடுப்பூசிக்கு அனுமதியளிக்குமாறு சீனா, நேபாளை நிர்ப்பந்தித்து வருவது அம்பலமாகியுள்ளது. நேபாளத்தில் இருக்கும் சீனத் தூதரகத்திற்கும், நேபாள நாட்டு வெளியுறவுத்துறைக்கும் கடிதம் மூலம் நிகழ்ந்த தகவல் பரிமாற்றங்கள் கசிந்ததன் மூலம், சீனாவின் நிர்ப்பந்தம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதற்குத் தேவையான ஆவணங்களை பிறகு வழங்குவதாகவும், தடுப்பூசிக்கு முதலில் அனுமதி வழங்குமாறும் சீனா, நேபாளத்திடம் கூறியுள்ளது. மேலும், தங்கள் நாட்டு தடுப்பூசிக்கு உடனடியாக அனுமதி வழங்கவில்லையென்றால், நேபாளத்திற்கு கரோனா தடுப்பூசிகள் கிடைக்க நீண்ட நாட்கள் ஆகும் என்றும் சீனா எச்சரித்துள்ளது.

 

இதுகுறித்து செய்திகளை வெளியிட்டுள்ள நேபாள ஊடகங்கள், சீன வெளியுறவுத்துறை அமைச்சர், நேபாள வெளியுறவுத்துறை அமைச்சரிடம் டெலிஃபோன் வாயிலாகப் பேசி, கரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்க நிர்ப்பந்தித்ததாகவும் தெரிவித்துள்ளன. கரோனா தடுப்பூசியை ஏற்றுக்கொள்ளுமாறு சீனா நேபாளை வற்புறுத்தியுள்ளது அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. நேபாள் இன்னும் சீனத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்