குவாட்ஸ் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்ட நிலையில், ஈரான் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
கடந்த வாரம் ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்த சூழலில், இதற்குப் பதிலடியாக அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஹிஸ்புல்லா படை ஆதரவாளர்கள் காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை சூறையாடினர். இந்த சூழலில், இதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய இந்த தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீனா, இரு நாடுகளையும் நிதானமாக இருக்க வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் ஷூங், "சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பும் குறிப்பாக அமெரிக்கா, பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். மேற்கொண்டு பதற்றத்தை அதிகரிக்காமல் இருக்க நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்" என தெரிவித்துள்ளார்.