உக்ரைனில் போர் பதற்றம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், அங்கு தங்கியுள்ள வெளிநாட்டினரைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்துச் செல்வதற்கான பணிகளை வெளிநாட்டு தூதரகங்கள் தீவிரமாக செய்து வருகின்றன. அந்த வகையில், உக்ரைனில் இருந்து இந்தியர்களை உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ள இந்திய தூதரகம், அவ்வப்போது அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறது. மேலும், அந்நாட்டில் இருக்கும் இந்தியர்களை மீட்க கூடுதல் விமானங்களை இயக்க, விமான நிறுவனங்களுக்கு இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்த வகையில், இன்று (20/02/2022) மீண்டும் இந்திய தூதரகம், உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், "உக்ரைனில் பதற்றம் நீடிக்கும் நிலையில், அங்கிருந்து வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அத்தியாவசிய பணியில் இல்லாதோர், மாணவர்கள் தற்காலிகமாக, அந்நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். அவர்கள், உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு இயக்கப்படும் விமானங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களை அழைத்துச் சென்றவர்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் விமானம் குறித்த தகவல்களைப் பெறலாம். குறிப்பாக, இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களைத் தொடர்ந்து பார்க்க வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.